poem2016jun

கவிதைப் பக்கம் - கவிஞர் சாரல்(Edit)

இளைத்தோரும் கொழுத்தோரும்(Edit)

சோலைக் காடுகள் தொலைத்திடவே

தோப்பாய்த் தென்னை மிகுந்ததுவோ

ஆலை வைத்தவர் கொழுத்திடவே

அழகாய்க் கரும்பைக் கொடுத்தாரோ

பாலை நிலந்தான் மிகுந்ததுவோ

பணந்தான் யார்க்கும் கிடைத்ததுவோ

ஆலைக் கரும்பாய் ஆனதுவோ

அலையும் உழவர் வாழ்வெல்லாம்

கரும்பு தென்னை வாழையெனக்

கணக்கே இன்றி வைப்பதுவோ

அரும்பிய வறட்சிப் போக்கதனின்

ஆழம் உணர வேண்டாமோ

கரும்பின் நிகராம் பனையதுவும்

காப்பார் இன்றி அழிவதுவோ

விரும்பி எங்கும் ஆலைவைத்தோர்

வேளாண் மக்களைச் சுரண்டுவதோ

அளவாய் நீரை எடுத்தாலே

ஆழ்துளைச் செலவும் குறையாதோ

கொளுத்தும் வெயிலில் உழைத்தாலும்

குறையாக் கடனே பரிசாமோ

இளைத்தவர் என்றும் உழவரிங்கோ

ஏற்றம் எட்டாக் கனிதானோ

ஒளிரும் வாழ்வை அடைவதற்கே

ஒன்றாய் உழவர் சேர்வதென்றோ?


Powered by LionWiki. Last changed: 2016/06/09 04:52 Erase cookies Edit History