| Main page Recent changes | Edit History | |
jck2016jun | ||
|---|---|---|
குமரப்பாவிடம் கேட்போம்(Edit)உருவாக்கலா அழித்தலா?(Edit)தமிழாக்கம் பாபுஜி நம் நாட்டின் தொழிலதிபர்களின் கவலை எல்லாம் தங்கள் தொழில்களை வளர்ப்பதில்தானே ஒழிய சாதாரண மக்களின் தேவைகள் எவை என்பதல்ல! இந்தியா தனது தொழிற்சாலைகளை நிலையானதொரு முறையில் வளர்க்க வேண்டுமானால் அது ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக்கொள்கைகளால் மட்டுமே சாத்தியம் என்றும், இத்தகைய கொள்கைகளால் குறுகிய கால சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் இதுவே சிறந்த வழி என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். தமது தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களை இந்தியாவிற்கு வெளியில் ஏற்றுமதி செய்யாமல் இந்திய நிறுவனங்களால் தொழிலில் தாக்குபிடிக்க முடியாது என்று அவர்கள் உறுதியாக எண்ணுகின்றனர். அவர்கள் நமது அரசின் பொருளாதாரக் கொள்கைகளை லார்ட் கெய்ன்ஸின் 'விரிவடைந்துகொண்டே போகும் உற்பத்தி' என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் (நாம் சாப்பிட சாப்பிட வளரும் ரொட்டி போல்) அமைக்கப் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறான அணுகுமுறையின் மூலம் மட்டுமே நம் சமூகத்தின் தேவைகளை நிதி அமைச்சர் நிரப்ப இயலும் என்றும் எண்ணுகின்றனர். சாப்பிட சாப்பிட எப்படி ரொட்டி வளரும் என்று ஒரு சாதாரண குடிமகனும் தம் பொது அறிவு கொண்டு சிந்திக்கையில், மற்றவர்களின் ரொட்டி உண்ணும் இந்தப் 'பாதிக் கடவுள்களால்' மட்டுமே இது சாத்தியம் என்று நிரூபிக்க முடியும்!. இத்தகையதொரு அற்புதம் எப்படி நிகழ்கிறது? அவர்கள் தங்களின் நியாயமான பங்கான ரொட்டிகளைத் தொடாமல் மற்றவர்களின் ரொட்டிகளை - அவர்களால் விழுங்க முடியும் அளவை விடக் கூடுதல் அளவு கடிப்பதன் மூலம்- தங்களின் ரொட்டி பெரிதாகிக் கொண்டே போகின்றதென்று எண்ணுகின்றனர்! பெரிய தொழில் நிறுவனங்களின் உத்திகள் அறிவியலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதை விட அழிப்பதையே செய்ய முயல்கின்றனர், வளர்ச்சியை நோக்கிய செயல்பாடென்ற போர்வையில். உணவுப்பொருட்களை விளைவிப்பதிலிருந்து மாற்றித் தங்களது ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நமது நாட்டிற்கு சேவைக்கேடு செய்வது மட்டுமன்றி நம் நாட்டு மக்களின் நலத்தையும் சீர்குலைக்கின்றனர். உணவு உற்பத்தியைக் குறைத்து ஆலைகளுக்குத் தேவையான நீண்ட இழை பருத்தி, ஏற்றுமதிக்காக புகையிலை மற்றும் நிலக்கடலை உற்பத்தி செய்வது சுரண்டலே அன்றி எந்த விதத்திலும் 'உற்பத்திப் பெருக்கம்' ஆகாது! இத்தகைய 'வளர்ச்சி' தான் நம் நாட்டுக்கு மக்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்து கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆலை அதிபர்கள் பணியாரங்கள் பல சாப்பிட்டும் அவர்களின் பணியாரங்கள் அளவு குறையாமல் இருப்பதை நாம் கண்கூடாக காண முடிகிறது. ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட சாதாரணனின் நிலை என்ன? உற்பத்தியை உணவிலிருந்து திட்டமிட்டு மாற்றி ஆடம்பரப் பொருட்களுக்கான மூலப்பொருட்களை நோக்கி நகர்த்தியதன் மூலம் நம் நாட்டில் நிலவுவதென்னவோ பஞ்சம் மேல் பஞ்சம் மட்டும்தான். நாம் உண்மையாகவே உற்பத்தியைப் பெருக்குவதில் முனைந்திருந்தால் இந்நேரம் நமது அடிப்படைத் தேவைகளை எளிதாகச் சந்திக்கக்கூடிய நிலையில் அல்லவா நாம் இருந்திருக்கவேண்டும்? ஆனால் உண்மை என்னவென்றால் முன்னேப்போதுமிலாத அளவுக்குக் கொடுமையானதொரு உணவுப்பஞ்சத்தை நாம் இப்போது எதிர்கொள்கிறோம்! உணவு உற்பத்தியையே அடிப்படையாக கொண்ட நம் நாடு இப்போது நமது மக்களின் வயிற்றை நிரப்ப உணவை இறக்குமதி செய்வது எவ்வளவு கேவலம்? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப்பார்க்கையில் நாம் உற்பத்தி செய்வதை விட (உணவு) உற்பத்தியை அழிப்பதில்தான் கவனம் செலுத்தியுள்ளோம் என்பது தெளிவாகிறது. வேலையின்மையினால் பாதிக்கப்பட்டுள்ள நம் நாட்டின் உற்பத்தி முறைகள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் விதத்தில் அல்லவா இருக்கவேண்டும்? இதுவரை நாம் மேற்கொண்ட உற்பத்திப் பெருக்க நடவடிக்கைகள் வேலையின்மையை அதிப்படுத்திவிட்டன என்பதே உண்மை. மேலை நாடுகளில் வேலை நேரத்தைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்கும் கருவிகள் நம் நாட்டைப் பொருத்தவரையில் வேலையாட்களை நீக்கி வேலையின்மையை அதிகப்படுத்தவே உதவுகின்றன. இத்தகைய கருவிகளைத் தம் தொழிற்சாலைகளில் நுழைத்ததன் மூலம் ஆலை அதிபர்கள் நம் மக்களின் வாழ்க்கைத்தரத்தையே சீர்குலைத்துவிட்டனர். இயற்கை அள்ளித்தரும் காலத்தில் கூட நமது நாட்டின் பஞ்ச சூழல் நிரந்தரமாக இருக்கிறது. வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என்கிற அறைகூவலோடு நாம் செய்யும் இந்தச் செயல்கள் அடிப்படை உயிர்வாழுதலையே பாதித்துக்கொண்டல்லவா உள்ளது? நம் 40 கோடி மக்களின் வளமான வாழ்வு தொழிற்சாலைகளின் முன்னேற்றத்தில்தான் இருக்கிறது என்று நம்பும் நம் மக்கள், இந்த 40 கோடி மக்களின் வாழ்வை பாதிக்கும் எந்தவொரு தொழிற்சாலை சார்ந்த முன்னேற்றத்தையும் விரும்புவதில்லை. முன்னேற்றம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டுமே அன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே என்ற அளவில் இருக்கக்கூடாது. நுகர்வுக்கலாச்சாரத்தின் அடிப்படையிலான தொழில் வளர்ச்சியினால் நம் நாட்டின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வளர்ச்சியைத் தர முடியுமா என்று இவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். கடந்த காலத்தில் இத்தகைய 'தொழில் வளர்ச்சி'யினால் உண்டான சோதனைகளை அவர்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். நம் நாட்டு சாதாரண மக்களின் தேவைகளை முன்னிருத்தி நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்காக செய்யப்படும் எந்தவொரு 'உற்பத்திப் பெருக்கத்தையும்' நாம் ஆதரிக்கிறோம். ஆனால் இவற்றை அறிவியல் முறையில் செய்யாமல் சில தனி நபர்களின் வளம் சேர்க்கும் பேராசையின் அடிப்படையில் செய்யப்படும் எதையும் நாம் எதிர்க்கிறோம். நாம் இதுவரை பார்க்கையில் அறிவியல் 'ஆக்குதலை' விட 'அழிவிற்கான' வேலைகளில்தான் செம்மையாகச் செயல்படுத்தப்பட்டு வருவது புலனாகிறது. இனிமேலாவது தற்சார்பை ('ஸ்வராஜ்' ) முன்வைத்து செய்யப்படும் செயல்களில் மூலப்பொருட்கள் உற்பத்தியிலிருந்து நமது குறிக்கோள் மக்கள் நல மேம்பாட்டினை நோக்கி திரும்பும் என்று நாம் எதிர்பார்க்கலாமா?
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/09 09:27 Erase cookies | Edit History | |