dp04

தரம்பால் கண்ட இந்தியா(Edit)

ராம்

இந்தியக் கல்விமுறை – வேரோடு சாய்த்த‌ ஒரு அழகிய மரம்!(Edit)

“..இதனை நான் முழு நம்பிக்கையுடனும், யாரும் நிராகரிக்க இயலாது என்ற துணிவுடனும் கூறுவேன் – இந்தியா கடந்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் படிப்பறிவில் பின் தங்கியுள்ளது; பர்மாவின் நிலையும் இதுதான். இதற்கு முக்கியக் காரணம், பிரிட்டிஷ் அரசாங்கம்தான். இவர்கள் இருப்பதை அப்படியே கைக்கொள்ளாமல் அதன் வேரை ஆராயும் குணத்துடன் எங்கள் கல்விமுறையின் ஆழமான வேர்களைக் காண்பதற்காக‌ அந்த அழகிய மரத்தை வேரோடு சாய்த்தனர். ஆனால் அதனை மீண்டும் நடுவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை.

எங்கள் கிராமத்து கல்விசாலைகளை நிர்மாணிப்பதில் இவர்களுக்கு எந்த வித விருப்பமும் இருக்கவில்லை. “

- 1931ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி அவர்கள் லண்டனில் வட்டமேஜை மாநாட்டிற்கு சென்றபோது சத்தம் ஹவுஸ் என்ற இடத்தில் நிகழ்த்திய ஒரு உரையில் இவ்வாறு கூறுகின்றார்.

காந்தியடிகளின் இந்த கருத்தை திரு. பிலிப் ஹார்டாக் மறுத்து, அதனை காந்தியடிகள் நிரூபிக்கவேண்டும் இல்லையேல் பொது மேடையில் தவறென்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஏறத்தாழ 10 வருடங்களுக்கும் மேல் காந்தியடிகளுடன் கடிதம் வாயிலாக விவாதித்தார்.

“...நான் எங்கள் கிராமத்துப் பள்ளிகளின் ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய நிலை குறித்த ஆய்வை இன்னமும் கைவிடவில்லை. என்னுடைய கருத்திலும் எந்த மாறுதலும் இல்லை. இதனைக் குறித்துப் பல கல்வியாளர்களுடன் பேசி வருகிறேன். அவர்கள் யாவரும் எனது கருத்தை உண்மை என்று ஆதரிக்கவே செய்கின்றனர், ஆனால் அதனை எந்த சந்தேகமும் இல்லாத அளவிற்கு நிரூபிக்கும் விதத்தில் எந்த சான்றையும் அளிக்கவில்லை. நான் எனது கருத்தில் திடமாகவே உள்ளேன்.”

– இவ்வாறு காந்தியடிகள் திரு. ஹார்டாக் அவர்களுக்கு 1939ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் கூறுகின்றார்.

கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஹார்டாக், இந்தியாவின் கல்வி குறித்து 4 சொற்பொழிவுகளை ஆற்றி அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக 1939ஆம் ஆண்டு வெளியிட்டார். இதே சமயத்தில், காந்தி பல முறை சிறைசென்றார்; அரிஜனங்களுக்கான போராட்டங்களை முன்வைத்தார்; புதிதாக சேவாகிராம் ஆசிரமத்தை நிறுவி அங்கு நயீதாலீம் என்ற கல்விமுறையை அமைத்தார்; காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, ‘கிராமத் தொழில்’ முயற்சியைத் தொடங்கினார்.

திரு. தரம்பால் அவர்களின் மிக முக்கியமான படைப்பு என்று பலராலும் கருதப்படுவது, “பீயூடிஃபுல் ட்ரீ” (Beautiful Tree) அதாவது அழகிய மரம் என்று அழைக்கப்படும் இந்தியக் கல்விமையங்களை பற்றிய அவரது ஆவணத் தொகுப்பு. மகாத்மா காந்தியின் முன்வரும் கருத்தை முழுமையாக ஆதரிக்கும் விதத்தில் அமைந்த இந்த தொகுப்பு முழுவதுமாக ஆங்கில ஆவணங்களைகொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாம் குறிப்பிடத் தக்க‌ விஷயம் என்னவென்றால், இந்த ஆவணங்கள் அனைத்தும், இந்தியக் கல்வி மற்றும் பள்ளிகளின் தரத்தைக் குறித்து ஆங்கிலேயர்கள் புரிந்து கொள்ள முயன்று அதற்காக நிறுவிய கள ஆய்வு மற்றும் அதன் விளைவாக வந்தவை.

அப்படி என்னதான் இந்த ஆவணங்கள் கூறுகின்றன?

1. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்திய காலத்தில், இந்தியாவில் மிகப் பரவலாகவே கல்வி போதிக்கும் பள்ளிகள் இயங்கி வந்தன. 1811 வருடக் கணக்கு கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால், இங்கிலாந்தில் பள்ளிக்கு செல்லும் ஆங்கிலேயர்களைவிட இந்தியாவில் பள்ளிக்குச் (ஆய்வுசெய்யப்பட்ட மதராஸ் மாகாணத்தில்) செல்லும் இந்தியர்கள் அதிகமாகவே தெரிகின்றது.

2. 1800 வருடங்களில் இன்றைய பீகார் மற்றும் வங்க தேசத்தில் ஏறத்தாழ 1,00,000 பள்ளிகள் செயல்பட்டதாக ஆங்கிலேயர் நிறுவிய கள ஆய்வு செய்த ஆவணங்களில் பதிவு செய்துள்ளது

3. பெரும்பாலும் இந்தியாவில் பள்ளிகளில்லாத கிராமங்களே இல்லை என்பதை ஆங்கிலேயர்களின் பள்ளிகளைப் பற்றிய ஆய்வு உறுதி செய்கின்றது

4. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் இருந்தன‌. அனைத்து ஜாதி மக்களும் தங்களுக்கான பாடசாலைகளை அமைத்து அதில் கல்வி புகட்டி வந்தனர். உதாரணமாக, 1820களில் மெட்ராஸ் மாகாணத்தில், 12500 பள்ளிகள் இயங்கி வந்தது. 23% பிராமணர்களும், 10% வைஸ்யர்களும், 45% சூத்திரர்களும், 15% இதர ஜாதிகளைச் சேர்ந்தவர்களும், 7% முஸ்லிம்களும் பள்ளிக்கு சென்றதாக இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன

5. இந்தியப் பள்ளிகளில் பாடத் திட்டங்களின் அமைப்பும் அதன் பராமரிப்பும் பெரிதும் அந்த பகுதி மக்களைச் சார்ந்தவாறே இருந்தன‌. மொழிப்பயிற்சி, எழுதவும், படிக்கவும் பயிற்சி, கணக்கிடுதலில் பயிற்சி மற்றும் வணிகம் மற்றும் விவசாயம் என்று பலதரப்பட்ட பயிற்சிகள் இந்தப் பாடத் திட்டத்தில் அமைந்திருந்தன. விவசாயம் மற்றும் வாணிபத்திற்கான கணிதப்பயிற்சி பரவலாகக் காணப்பட்டது.

6. ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஏற்றவாறு பல புத்தகங்கள் இந்த பள்ளிகளில் உபயோகிக்கப்பட்டன. ராஜமுந்திரியைச் சேர்ந்த ஒரு ஆவணம் 43 புத்தகங்கள் அங்குள்ள பள்ளிகளின் பாடதிட்டத்தில் இருந்ததாக, அவற்றின் பெயர்களுடன் பதிவுசெய்கின்றது

7. ஆரம்பப் பள்ளிகளைத் தவிர, உயர் கல்விக்கான பள்ளிகளும் இந்தியாவின் பல பகுதிகளில் இயங்கி வந்த‌தற்கான சான்று இந்த ஆய்வில் தெளிவாக வெளிப்படுகிறது. இவ்வாறான 1094 உயர்கல்வி நிறுவனங்களை ஆங்கிலேயர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

8. இத்தகைய உயர்கல்விக் கல்லூரிகளில், இலக்கணம், சட்டம், தர்க்கம், ஜோதிடம், மருத்துவம், தந்திரம், இதிகாசம் என்று பல துறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது

9. இன்றைய தமிழகமாக உள்ள பகுதிகளில் 455 உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு நடந்தபோது 2500ம் மேற்பட்ட மாணவர்கள் பயின்றதாக இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில், கோயம்பத்தூரில் 173 உயர்கல்வி நிறுவனங்களும், தஞ்சையில் 109, வட ஆற்காட்டில் 69, சேலத்தில் 53, செங்கல்பட்டில் 51 உயர்கல்வி கல்லூரிகளும் செயல்பட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

10. பெண்களில் பள்ளிகூடம் சென்று பயின்றவர்கள் குறைவாகவே இருந்துள்ளனர். மதராஸ் மாகாணத்தின், திருநெல்வேலி போன்ற பகுதிகளில், “நாட்டியம் ஆடும்” பெண்கள்தான் பள்ளிகளுக்கு சென்று பயின்றார்கள் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இது பெரும்பாலும் அந்த காலத்தில் நிலவிய தேவதாசி பெண்களை குறிப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இதர பகுதிகளில் பெண்கள் வீட்டிலேயே பயில்விக்கப்படுகின்றனர் என்பதையும் பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிமார்களுக்கு வீட்டிலேயே கல்வி போதித்தனர் என்பதை பதிவு செய்கின்றது

11. பாரம்பரியமாகவே, விவசாயம் மற்றும் தொழில்களிலுக்கு விதிக்கப்படும் வரியிலிருந்து ஏறத்தாழ 30 விழுக்காட்டிற்கும் மேல் கலாசார மற்றும் சமூக நலனுக்காகவே செலவிடப்பட்டது. இத்தகைய செலவுகள், கல்வி நிறுவன‌ங்களுக்குத் தேவையான உதவிகளை அளித்ததாகவே தெரிகின்றது.

12. 1820களில் 30% பேருக்கும் மேல் பள்ளிக் கல்வி பயின்ற மாகாணங்களில் கூட 1890களில் 20%க்கும் கீழாக குறைந்தது அக்கால ஆய்வுகளையும், பிற்கால ஆய்வுகளையும் ஒப்பிட்டு பார்கையில் நமக்கு வெளிச்சமாகின்றது.

இன்னமும் இந்த ஆவணங்களினால் நமக்கு நமது சமூகத்தைப்பற்றிய புரிதலில் பல மாறுதல்கள் ஏற்படும். பொதுவாகவே நமது மக்களின் மத்தியில் நாம் ஏதோ காட்டுவாசிகளாக வாழ்ந்ததாகவும், ஆங்கிலேயர் வந்து நம்மை வாழ்விக்கவில்லையென்றால் நாம் இன்றும் அவ்வாறே வாழ்ந்து கொண்டிருப்போம் என்னும் ஒரு கருத்து நிலவி வருகின்றது. “வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே இருந்திருக்கலாம்” என்று சுதந்திர இந்தியாவில் பிறந்து, வாழ்நாள் முழுவது அடிமைத்தனம் அனுபவிக்காத பலர் பேசுவது நமது வரலாற்று அறிவிலித்தனத்தையே காட்டுகிறது. இதில் நாமாக சிந்திக்கத்தவறியது கொஞ்சமென்றால், நமது சமூகத்தைக் குறித்து, ஆங்கிலேயர் ஏற்படுத்திய கட்டுக்கதைகள் மிக அதிகம்.

எவ்வாறு ஒரு சமூகம், தன்னை ஏறத்தாழ 150 வருடகாலம் வாட்டி வதைத்த மற்றொரு சமூகத்தை, தனது கோடிக்கணக்கான மக்களின் உயிர்களையும், வளங்களையும், வாழ்வாதாரங்களையும், சின்னங்களையும் அழித்த ஒரு வன்மம் கொண்ட நாகரீகத்தின் எழுத்துக்களை நம்பும் என்று சாதாரண‌மாக எழக்கூடிய கேள்வி நமது மக்கள் மத்தியில் எழுவதில்லை.

ஜாதி அடிப்படையிலும், ஊர்களின் அடிப்படையிலும் இன்றும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக வெகுண்டு எழும் நமது நாட்டு மக்கள், ஏனோ வெள்ளையன் நமது சமூக கட்டமைப்பு பற்றி எழுதியவற்றை மாத்திரம் ஏதோ சாத்திரம் போல் பாவித்து, அதனை உண்மைப்படுத்தும் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றனர் ஒரு சாரார். அதே சமயம், வரலாற்றை சரிவர புரிவதற்கும் அதனை ஆராய்வதற்கும் முயற்சிக்காமல், வரலாற்றிற்கே ஒரு மத, இன, ஜாதி சாயத்தையும் பூசி, செயற்கை பொலிவேற்றி மக்களைப் பிரிக்கும் நோக்கில் மற்ற சிலர் ஈடுபட்டுள்ளனர்.

வரலாறு என்றாலே என்ன என்று எனக்குத் தெரியாது, நான் என் காலத்திற்கும், எனது மக்கள் காலத்திற்கும் பொருள் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றேன், என்னும் சராசரிப் பெரும்பான்மையை சேர்ந்தவர்கள்தான் இத்தகைய வரலாற்று செயற்கைப் பொலிவிற்கும், தவறான புரிதலுக்கும் முதல் இலக்கு. இவர்கள்தான், “வெள்ளக்காரன் பொய் சொல்ல மாட்டான்” என்ற பிதற்றலான வாதங்களைக்கொண்டு தங்கள் சிந்தனை அடிமைத்தனத்தை தக்க வைத்துக் கொள்ளுகின்றனர். இவர்களில் பலரும், வெள்ளையர்கள் நமது மக்களைக்குறித்து எழுதியவற்றை உள்வாங்கி, அந்தக் கூறுகளைக் கொண்டே நமது சமூகங்களையும், மக்களையும், மக்கள் கூட்டங்களையும், கட்டமைப்புகளையும், நிறுவன‌ங்களையும் நோக்கும் போக்கு நமது நாட்டில் இன்றும் வெள்ளயன் ஆட்சி நமது சிந்தனை அளவில் தொடர்வதற்கான வழிவகுக்கின்றது.

நமக்கு வெள்ளையர் காலத்திற்கு முன்னால் எந்த விதமான கல்வியமைப்பும் இருக்கவில்லை என்பது, வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட புனைவுகளில் மிக முக்கியமானது. இதனை இன்றும் நமது படிக்க, எழுதத் தெரிந்த பலரும் நம்புவது, துரதிஷ்டமே. நமது நாட்டில் ஏன் வரலாற்றை மக்கள் மதிப்பதில்லை என்பது ஒரு புறமிருக்க, நமது மக்களின் வரலாற்றுச் சான்றுகளே, நம்மைக் குறித்து மற்றவர் எழுதுவதை வைத்துத்தான் என்பதும் அண்மைக்காலம் வரை உண்மையே.

“இந்தியாவின் வரலாற்று அறிவு, கடந்த சில ஆண்டுகள்வரை, வெளிநாட்டவர் நமது நாட்டில் பார்த்தவற்றையும், அனுபவித்ததையும் தொகுத்ததைச் சார்ந்தே இருக்கிறது. இந்தக் கூற்று நமது பாரம்பரிய கல்வி குறித்த அறிவிற்கும் பொருந்தும். தட்ச‌சீலம் மற்றும் நலந்தா போன்ற நமது நாட்டின் பல்கலைக் கழங்களைக் குறித்த நமது புரிதலும் சமீப காலம்வரை, இவற்றிக்குப் பயிலவும், பார்க்கவும் வந்த பல கிரேக்க மற்றும் சீன நாட்டவரின் எஞ்சியுள்ள குறிப்புகளிலிருந்துதான்.

1500 ஆம் ஆண்டுக்கு பின்னர், சில வித்தியாசமான பயணிகள் இந்தியாவின் கரைக்கு வரத்துவங்கினர். பல நூற்றாண்டுகள் இந்தியாவுடன் எந்த தொடர்புமில்லாத நாடுகளிலிருந்தும், இந்தியாவின் தட்பவெட்ப‌ நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலிலிருந்தும் இந்த ஐரோப்பிய‌ர்கள் பயணித்து வந்தனர். ஆகையால், இந்தியாவின் பழக்க வழக்கம், சித்தாந்தம், மதம், கட்டுமானம், வளம், கல்வி, பயிலும் விதம் ஆகிய அனைத்தும் முற்றிலும் அவர்களது புரிதலுக்கும், கற்பனைக்கும், முன் அனுபவத்திற்கும் அப்பால் அமைந்திருந்தது.” இவ்வாறுதான் திரு. தரம்பால், இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்த துவங்குகின்றார். அழகிய மரம் படைப்பில் திரு. தரம்பால் உபயோகிக்கின்ற ஆவண தொகுப்புகள் நான்கு.

1. திரு. வில்லியம் ஆடம், என்னும் ஆங்கிலேய பாதிரியார், 1838-39, அன்றைய பீகார் மற்றும் வங்காள பிரதேசங்களின் சில மாகாணங்களில் மிகவும் அதிக விவரங்களுடன் நடத்திய ஆய்வறிக்கை

2. 1820களில், பம்பாய் மாகாணத்தில், பாரம்பரியக் கல்விமுறை குறித்து, ஆங்கிலேயர் நடத்திய ஒரு ஆய்வறிக்கையின் அச்சிட‌ப்பட்ட சுருக்கம்

3. 1822 முதல் 1825 வரை, மதராஸ் மாகாணத்தில் மிகப் பரவலான பிரதேசமான, வடக்கே கஞ்சம் (இன்றைய ஒடீசா) முதல் தெற்கே, திருநேல்வேலிவரை, மற்றும் மேற்கே மலபார்வரை (இன்றைய கேரளம்) அமைந்த ஒரு பாரம்பரிய கல்விமுறை குறித்த கணக்கெடுப்பு ஆய்வின் ஆவணம்

மற்றும்

4. இந்த காலகட்டதிற்கு 60 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் பிரதேசத்தில் திரு. லீட்னர், என்பவரால் இதே தொனியில் நடத்தபட்ட மற்றொரு கல்வியை பற்றிய ஆய்வு ஆவணம்

திரு. தரம்பால் அடிக்கடி கூறுவார், “நான் என்னுடைய படைப்பில் உபயோகித்த ஒவ்வொரு ஆவணத்திற்கும் நிச்சயமாக இன்னமும் பல சான்றுகள் இருக்கும். யாரேனும் தேடுவாராயின் இன்னமும் பல சான்றுகள் இந்த ஆங்கில ஆவணங்களிலேயே கிடைக்கும்” என்று. இந்தப் புத்தகத்தை வரும் கட்டுரைகளில் மேலும் காண்போம்.


Powered by LionWiki. Last changed: 2016/06/13 02:11 Erase cookies Edit History