| Main page Recent changes | Edit History | |
news2016jun | ||
|---|---|---|
|
This revision is from 2016/06/09 14:54. You can Restore it. திருநெல்லி விதைத் திருவிழா(Edit)திருநெல்லி, வயநாடு, கேரளம் - 2016 மே 27, 28 தனல் குழுவும், "நமது நெல்லைக் காப்போம்" இயக்கமும், திருநெல்லி பஞ்சாயத்துடன் இணைந்து நடத்திய ஒரு விதைத் திருவிழா இயற்கை எழில் கொஞ்சும் வயநாட்டின் திருநெல்லியில் நடைபெற்றது. கேரளத்தில் பஞ்சாயத்துக்கள் இது போன்ற மக்களது (அதுவும் விவசாயிகளின்) விழாக்களில், நிகழ்வுகளில் பங்கேற்பது புதிதல்ல என்பது பார்க்கவேண்டிய ஒன்று. முன்பே 'பசுமை போராளிகள்' என்னும் கட்டுரையில், எவ்வாறு வடக்கஞ்சேரி பஞ்சாயத்தும் அதன் தலைவரும் முன்னின்று அந்தப் பெரும்பணியை எடுத்திச்சென்றனர் என்றும், அதனைத் தொடர்ந்து பல பஞ்சாயத்துக்களும் பின்னர் தம் நிதியிலிருந்து பல விதமான உதவிகளையும் செய்தனர் என்றும் நாம் பார்த்தோம்! அவ்வாறே இங்கு இந்த விதைத் திருவிழாவை ஆரம்பித்த தனல் மற்றும் 'நமது நெல்லைக் காப்போம்' ஆர்வலர்கள், திருநெல்லி பஞ்சாயத்தை இந்த நிகழ்வை முன்னின்று நடத்த விட்டனர். அவர்களும் காட்டிகுளம் என்னும் ஊரின் பேருந்து நிலையத்திலேயே இடமும் நிதியும் கொடுத்து மிக சிறப்பாகக் கொண்டாடினர். கேரளத்தில் மிகவும் பெயர்பெற்ற குடும்ப சிரீ பெண்கள் குழுவும் இதில் ஈடுபட்டனர். அதனாலேயே ஒரு சிறிய பஞ்சாயத்து நகரத்தில் நடந்த இந்த விழா பெரும் ஆரவாரத்துடனும் பங்கேற்புடனும் வெற்றிகரமாக நடந்தேறியது. பல குழுக்களின் விதை அரங்கங்கள், துலா இயற்கை ஆடைகள், பெண்கள் குழுக்களின் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், பல வகைகளான அரிசி (நெல்லாகவும், அரிசியாகவும்) விற்பனைக்கும் பார்வைக்கும் வைக்கப்பட்டது மிகச் சிறப்பாக இருந்தது. பல்வேறு உள்ளூர் பெண்கள் குழுக்கள் பங்கு பெற்ற சமையல் போட்டியும் ஒரு பெரும் ஈர்ப்பு. அவர்கள் பல வகையான உணவுப் பொருட்கள், பாரம்பரிய மாற்றும் மிகவும் புதுமையான உணவு வகைகள் கொண்டு எல்லோரையும் அசத்தினர். இது பலாப்பழப் பருவம். பலாச்சுளை மற்றும் கொட்டையிலிருந்து அல்வா முதல் அதிரசம் வரை 20க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகை உணவுகள் செய்யப்பட்டு காட்சிக்கும் விற்பனைக்கும் இருந்தது ஒரு பெரும் சிறப்பு. பாரம்பரிய நெல்லைக் காப்பதில் மட்டுமன்றி, அதன் முக்கியத்தைப் பரப்புவதிலும் தனல், நமது நெல்லைக் காப்போம் இயக்கங்கள் முனைவது நம்பிக்கையை வளர்க்கிறது. [ [ மதிமயக்கும் மஸ்லின் கண்காட்சி(Edit)'''சென்னை, ஜூன் 3,4,5 ஒரு புடவையை மடித்துத் தீப்பெட்டியில் கொண்டு சென்றனர் என நாம் படித்திருக்கிறோம். அப்படிச் சிறையிலிருந்து தப்பித்தவர்களைப் பற்றியும் படித்திருக்கிறோம். ஔரங்கசீப் ஒரு முறை தொலைவிலிருந்து தனது மகள் வருவதைக் கண்டு அவள் மிகக்குறைந்த ஆடை அணிந்திருக்கிறாள் என்று சினந்து அவரைத் தனது அறைக்கு அழைத்த பொழுதுதான் தெரிந்ததாம் அவள் 7 அடுக்குகள் நிறைந்த டாக்கா மஸ்லின் ஆடை அணிந்திருந்தார் என்று! ஒரு மோதிரத்திற்குள் ஒரு புடவை செலுத்தப்பட முடியும் (இதனை அக்காலத்து ஆங்கில பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படம் இன்றும் உள்ளது).
இப்படிப் பல பெருமைகள் நிறைந்த மஸ்லின், பல கொடுமைகளையும் கண்டது. இப்படி மிகவும் நேர்த்தியாக நெய்யப்பட்ட ஆடைகள், தங்களது இயந்திரங்களால் நெய்ய முடியவில்லை என்ற பொறாமையாலும், தங்களது வியாபாரத்தைப் பெருக்கவும் ஆங்கிலேயர்கள் வங்காளத்தில் பலரது கட்டை விரலை துண்டித்த வரலாற்றை நம்மில் பலரும் அறிந்திருக்கலாம் (மறந்திருக்கலாம்) ! நமது பல பாரம்பரியக் கலைகளையும், வாழ்வாதாரங்களையும் போலவே, இன்று இந்த மஸ்லினும் அழிந்து வருகிறது. 82 வயதான ஒரு பாட்டியம்மாதான் மஸ்லினைக் கையால் நூல் நூற்பவர்களில் இன்று மிகவும் இளமையானவர் ! இன்று இதனை நாம் நுகர்வோராக, அரசாக, ஆர்வலராக, எதாவது ஒரு விதத்தில் மீட்டெடுக்க முனைய வேண்டும். அக்கறையின்றி அப்படியே விட்டு விட்டால், பின் நம்மால் அதனை மீட்கவே முடியாமல் போகலாம். மேலும் இதே போல், கையால் நூல் நூற்பது, கைத்தறி நெசவு எல்லாமும் அழிவை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. மகாத்மா காந்தியடிகள் கதரை நமது கிராம சுயராச்சியத்திற்கு ஒரு பெரும் ஆயுதமாகப் பார்த்தார். உள்ளூர்ப் பொருளாதாரத்தை வளர்க்கவும், ஊரக வழ்வாதாரங்களைக் காக்கவும், அண்மை வாணிபத்தைப் பெருக்கவும், பெண்களை மேம்படுத்தவும், பரவலாக்கப்பட்ட, பரந்த அண்மைப் பொருளாதாரத்திற்கும் இதனையே காந்தியும், குமரப்பாவும் பெரிதும் நம்பினர். இதன் அழிவு உள்ளூர்ப் பொருளாதாரத்தையும், பெண்கள் விடுதலையையும், ஊரக வளர்ச்சியையும் நாசமாக்கி விட்டது. இந்தக் காரணங்களுக்காகவும், அந்தக் கலைகளை இன்றும் கையாளும் திறமை வாய்ந்த அந்த கலைஞர்களுக்காகவும், இப்படிப்பட்ட சிறந்த பருத்தி ஆடைகளை நாமெல்லாம் உடுத்தவும், ஊக்குவிக்கவும் வேண்டும் .
மஸ்லின் என்பது சாதாரண விஷயமே அல்ல. ஆடைகளை நெய்யும் நூல்களின் நுட்பத்தையும் மென்தன்மையையும் Count எனப்படும் "எண்"களால் குறிப்பிடுவர். நமது சாதாரண கதர் ஆடைகள் 30 என்றிருக்கும். 40 என்றால் மேலும் மென்மையாக இருக்கும். 100 என்றால் மிக மிக மென்மையாக நேர்த்தியாக இருக்கும். 100 ஆண்டுகளுக்கு முன்னாலேயே நமது திறமைவாய்ந்த கை நெசவாளர்கள் 500- 600 என்னும் கவுண்டில் (எண்ணில்) ஆடைகள் நெய்ய உலகமே அசந்தது. வங்களர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே 1600 வரை இப்படிச் சென்றிருக்கிறார்கள். அப்படி 500 எண்ணில் ஒரு சட்டை நெய்தால் மொத்த சட்டையும் 10 கிராம் இருக்கும். மின்விசிறிக் காற்றில் பறந்து விடும்! இப்பொழுது புரிகிறதா ஔரங்கஸீப் எப்படி ஏமாந்தார் என்று? அப்படிப்பட்ட மஸ்லினையும் (பொதுவாக கைத்தறியையும், கையால் செய்யப்படும் எல்லாக் கைவினைப் பொருட்களையும்) நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். மீட்டெடுக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. பருவ மாற்றம் முதல், தொழில்நுட்பத்தில் தேர்ந்த வல்லுனர் வரை பல காரணிகள் உண்டு. நான் சென்று பார்த்த போது 82 வயதான மூதாட்டியே இருந்ததில் இளமையான நூல் நூற்கும் கலைஞர். அந்தத் திறனை நாம் பலருக்கும் (முக்கியமாக இளைஞர்களுக்கு) எடுத்துச்செல்ல வேண்டும். அவர்களிடம் பேசும் போது இதன் அகலம் என்ன என்று (36" அல்லது 45" என்று தெரிந்து கொள்ளக்) கேட்ட போது, அவர்கள், குளிர் காலத்தில் 45 அங்குலம் செய்ய முடியும், இப்பொழுது கோடைகாலத்தில் 36 அங்குலம்தான் தான் நெய்ய முடியும் என்றனர்! மேலும் இவர்கள் விடிகாலை 3 மணிக்கு எழுந்து, அந்த நேரத்தில் தான் நூற்பதற்குச் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நெய்வதற்கும் விடிகாலை எழுந்து சில குறிப்பிட்ட பாரம்பரிய வகை அரிசியிலிருந்து கஞ்சி காய்ச்சி நூலுக்கு வார்த்தால் தான் நெய்யச் சரியாக இருக்கும். இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அப்படி சுற்றுச் சூழலுடன் பிண்ணிப் பிணைந்தது இந்தக் கலை. இன்று பருவ மாற்றம், சரியான கலைஞர்கள் இல்லாமை, இதில் பொருளாதாரம் இல்லாமை, அந்த அரிசி ரகங்கள் இல்லாமை எனப் பல இல்லாமைகள் (தமிழகத்தில் டாஸ்மாக்கினால் நெசவாளர்களுக்கு காலில் வலிமை இல்லாமை என்பது வேறு கதை!) இவற்றை மீட்டெடுக்க நமது துலா இப்பொழுது சில குழுக்களுடன் வங்காளத்தில் பிரயத்தனப்படுகிறது. இங்கு நமது சென்னை மாநகருக்கு அந்த பாரம்பரியக் கலை நயம் மிகுந்த மஸ்லினைக் கொண்டு வந்து பிரபலப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. அதன் முதல் கட்டமாக அவ்வாறு நெய்யப்பட்ட மஸ்லின் ஆடைகளின் கண்காட்சி ஒன்று ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் சி.பி ஆர்ட்ஸ் சென்டரில் ஏற்பாடு செய்யப் பட்டது. துலா (சென்னை- மானாவாரி நாட்டுப்பருதியிலிருந்து கையில் நூல் நூற்று, கைத்தறியாக நெய்து, இயற்கை சாயங்களுடன் தைக்கப்பட்ட ஆடைகள்) , ப்ரயோக் (பெங்களூரூ, இயற்கை பருத்தியிலிருந்து யோகா ஆடைகள்), மல்கா (ஹைதராபாத், பருத்தியிலிருந்து ஆடை வரை உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம்!), நேச்சர்ஸ் அலீ (பெங்களூரு, ஆடை வடிவமைப்பாளர் தாரா அஸ்லாமின் முயற்சி- கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு), மஹாத்மா காந்தி கிராமத்யோக் சேவா சன்ஸ்தானம் (கொல்கொத்தா, மஸ்லின் மற்றும் காதியை மீட்க பாடுபடும் குழு) என எல்லோரும் இணைந்து நடத்திய இந்தக் கண்காட்சி உற்பத்தியாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே. நுகர்வோரிடம் இதற்கான வரவேற்பும், மூன்று தினங்களில் மஸ்லின் மற்றும் துலா ஆடைகளின் விற்பனையும் மிகவும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தன.
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/09 09:24 Erase cookies | Edit History | |