waterharvesting

This revision is from 2016/06/08 17:22. You can Restore it.

தவிர்க்கக்கூடிய வறட்சியின் பிடியில் 54 கோடி உழவர்கள்!(Edit)

நமக்குக் கிடைக்கும் மழை நீரை நல்லபடி சேமித்துப் பயன்படுத்தாவிட்டால் எவ்வளவு மழை பெய்து என்ன பயன்? வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயா மாநிலத்தின் சிரபுஞ்சிப் பகுதியில் ஆண்டுக்கு 11,000 மில்லிமீட்டர் (மிமீ) மழை பெய்கிறது. (தமிழ்நாட்டின் சராசரி மழையளவு சுமார் 800 – 900 மிமீ தான்.) ஆனால் அங்கும் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது!

ராசசுத்தான் மாநிலம் பார்மர் பகுதியின் ஆண்டுச் சராசரி மழை ஏறக்குறைய 100 மிமீ இருக்கும். ஒரு எக்ட்டேர் நிலத்தில் 100 மிமீ மழை பெய்தால் பத்து லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். குடிப்பதற்கும் சமையலுக்கும் நாளொன்றுக்கு ஒருவருக்கு 15 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அப்படியானால் மேற்படி மழைநீர் 182 பேருக்கு ஓராண்டுக்குப் போதுமானது. ஆனால் இந்த மழைநீர் முழுவதையும் சேமிக்க இயலாது. ஓரிடத்தில் ஆண்டு மழை எவ்வளவு நாள்களில் பெய்கிறது, அவ்விடத்தில் நிலத்தின் தன்மை எத்தகையது (பாறைகள் அதிகம் உள்ளன, சரிவான நிலமா அல்லது சமநிலமா) என்பன போன்ற பல காரணிகளைப் பொறுத்து மழைநீர் சேமிப்பு அமையும். இருப்பினும் 100 மிமீ மழையில் 5 லட்சம் லிட்டர் நீரையாவது சேமிக்கமுடியும்.

1991-இல் இந்தியாவில் 587,226 சிற்றூர்கள் இருந்தன. அவற்றில் 63 கோடிப்பேர் வாழ்ந்தனர்; சராசரியாக ஊருக்கு 1,071 பேர். 2001-இல் ஒவ்வோர் ஊரிலும் சராசரியாக 1,200 பேர் இருந்திருப்பார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தியச் சராசரி ஆண்டு மழையளவு 1,170 மிமீ. அதில் பாதி நீரை மட்டுமே சேமிக்கமுடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், சமையல், குடிநீர் ஆகியவற்றுக்கு 1,200 பேருக்கு ஓராண்டுக்குத் தேவையான அறுபத்தைந்து லட்சத்து எழுபதாயிரம் லிட்டர் நீரைச் சேமிப்பதற்கு 1.12 எக்ட்டேர் நிலமே போதுமானது. இது இயலாத செயலா? இந்த அளவு நிலங்கூட இல்லாத சிற்றூர் இந்தியாவில் உள்ளதா?

இந்தியாவின் நிலப் பரப்பு முப்பது கோடி எக்ட்டேருக்கும் அதிகம். அதில் மலைகள், காடுகள் ஆகியவை தவிரச் சுமார் இருபது கோடி எக்ட்டேர் நிலத்தில் மழைநீரைச் சேமிக்கமுடியும். அப்படியானால் ஒவ்வோர் சிற்றூரிலும் சராசரியாக 340 எக்ட்டேர் பரப்பில் ஆண்டுக்கு மூவாயிரத்து எழுநூற்றைம்பது கோடி லிட்டர் மழைநீர் கிடைக்கிறது.

இந்நிலையில் இந்திய மக்கள் தண்ணீருக்காகக் கண்ணீர் சிந்தவேண்டிய தேவை என்ன என்று நாம் சிந்திக்கவேண்டும்! வீட்டுப் பயன்பாட்டுக்கு மட்டுமன்றி வேளாண்மைக்கும் போதுமான நீர்வளம் நம்மிடம் உள்ளது என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

இந்திய மாநிலங்களில் ஒவ்வோர் ஊரின் தண்ணீர்த் தேவையையும் மழைநீர் சேமிப்பின் மூலம் நிறைவு செய்ய முடியும் என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது.


Powered by LionWiki. Last changed: 2016/06/08 12:41 Erase cookies Edit History