| Main page Recent changes | Edit History | |
பயணி | ||
|---|---|---|
|
This revision is from 2016/06/06 08:20. You can Restore it. வளர்ச்சியே உன் விலை என்ன?(Edit)பயணி(Edit)பொருளாதார முன்னேற்றம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கூட்டுவது என்று உலகமெங்கும் நம்பப்படுகிறது; ஊடக வலுவால் நம்ப வைக்கப்படுகிறது. இதன் விளைவாகப் பல நிரூபிக்கப் படாத ஊகங்கள் மெய்போல் பரப்பப் படுகின்றன. நல்வாழ்விற்குப் பணம் தேவை; பணம் ஈட்ட வேலை தேவை; வேலைகள் உருவாக்கப் பலகோடிகள் முதலீடு தேவை; முதலீட்டிற்கு அந்நியப் பணக்காரர்கள், முதலாளிகள் தேவை; முதலாளிகளுக்கு வளமான நிலம், நீர் ஆதாரம், ஆற்றல், சட்டத் தளர்த்தல்கள் போன்ற பலவசதிகள் தேவை; எனவே பொருளாதாரக் கொள்கை என்பது வளங்களை அழித்து ஆலைகளையும், ஆற்றல் ஊற்றுக்களையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் , அவற்றைப் பாதுகாக்கும் தற்போதைய சட்டங்கள் திருத்தி அமைக்கப் பட வேண்டும் என்று உலகம் முழுவதும் ஒரு கண்மூடித்தனமான, அறிவையே பயன்படுத்தாத மூட நம்பிக்கையுடன் இந்த "வளர்ச்சி"க்கு ஆட்படுத்துகிறார்கள். (இதைக் குறித்து நம் தாளாண்மையில் புதிய பொருளாதாரக் கொள்கை என்றொரு தொடர் எழுதியிருந்தோம்). இந்த ஊகங்களின் அடித்தளம் ஆயப்படுவதே இல்லை. அதைக் கேள்வி கேட்போரோ தேசத் துரோகக் குற்றங்களில் சிறையில் அடைக்கப் படுகிறார்கள். அமைதியாகக் காட்டில், யார் வம்புக்கும் போகாமல் தன்னிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியினரைப் பெரும் வன்முறையுடன் இடம்பெயர்த்து (அப்புறப்படுத்தி) அங்கு அணை அமைக்கிறேன், ஆலை அமைக்கிறேன் என்று கோடிக்கணக்கான ஏக்கர் காடுகளை அழிப்பது எப்படி வளர்ச்சி ஆகும்? நாம் இத்தகைய 'வளர்ச்சி'க்குக் கொடுக்கும் விலைதான் என்ன? ஹோண்டுராஸ் நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகள் மூலம் இதைச் சற்றுப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ், 1.13 லட்சம் சதுர கிலோமீட்டரும் 80 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட ஒரு நாடு . எனினும் மிகுந்த கனிம வளங்களும், வனப் பரப்பும் கொண்டது. ஏறத்தாழ 41.5 விழுக்காடு வனப் பரப்பைக் கொண்டது. (நம் தமிழ் நாட்டில் 42% காடாக இருந்து, 80 லட்சம் பேர் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.) 19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்நாட்டில் வாழை சாகுபடி செய்து ஏற்றுமதி செய்வதற்கென வழக்கம்போல் அமெரிக்க பகாசுர நிறுவனங்களுக்கு அந்நிய முதலீட்டுக்குத் தன் கதவைத் திறந்தது ஹோண்டுராஸ். நாட்டின் வடக்குப் பகுதியில் காடுகளை அழித்து மிக லாபகரமான வாழைத் தோட்டங்களைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்து அந்நிறுவனங்கள் மிகவும் நன்றாகவே வளர்ந்தன. இவற்றில் வேலை செய்ய ஜமைக்கா, பெலைஸ் போன்ற அயல் நாடுகளில் இருந்து கூலிகள் இறக்குமதி செய்யப் பட்டனர். ஆனால் ஹோண்டுராஸ் மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்விதத்திலும் உயரவில்லை (எங்கோ கேட்ட கதை போல் இருக்கிறதல்லவா?) தன் நாட்டைத் தாராள மயமாக்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்போதும் ஹோண்டுராஸ் மிகவும் ஏழ்மையான நாடாகவே இருக்கிறது. 2000 முதல் 2007 வரையிலான கால கட்டத்தில் ஹோண்டுராஸின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6% வளர்ந்தது. உலக அளவில் இது மிகப்பெரிய "வளர்ச்சி". ஆனால் ஹோண்டுராஸில் 50% பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள் . 27% மக்களுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை. "உலகின் மிகவும் கடன் பட்ட ஏழை நாடுகளில் ஒன்று ஹோண்டுராஸ்" என்று உலக வங்கி 2005ல் அறிவித்தது. தற்காலப் பொருளாதார வளர்ச்சி என்பதை எளிமையாக விளக்க வேண்டுமானால், 40 பேர் கொண்ட ஒரு பள்ளி வகுப்பில் எல்லோரும் இரண்டு இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஒட்டு மொத்த நுகர்ச்சி 80 இட்லி. இதில் 25 பேரிடம் இருந்து ஒரு இட்லியைப் பிடுங்கி மேலும் 20 இட்லி கடன் வாங்கி, முதல் ஐந்து பேருக்கு 8 இட்லி, அடுத்த 10 பேருக்கு 2.5 இட்லி எஞ்சிய 25 பேருக்கும் ஆளுக்கு ஒரு இட்லி என்று ஆசிரியர் பகிர்ந்து அளித்தால் வகுப்பின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 இட்லி ஆகி 20% வளர்ந்து விடுகிறது! பட்டினியில் 60 % மக்கள் இருப்பதைப் பற்றி யாரும் பேசக் கூடாது ; கேட்டால் தேசத் துரோகம். 2009க்குப் பின் ஹோண்டுராஸ் நாட்டின் வளமான இயற்கையை அழிக்கும் பெரும் திட்டங்கள் நிறையப் போடப் பட்டன. நாட்டின் மொத்தப் பரப்பில் 30 விழுக்காடு கனிமச் சுரங்கங்களுக்காக ஒதுக்கப் பட்டது. பழங்குடியினர் இடம்பெயர்க்கப் பட்டனர். இச்சுரங்கங்களின் தீராத ஆற்றல் பசிக்கென நாடெங்கும் நூற்றுக் கணக்கான அணைகள் கட்டத் திட்டமிடப் பட்டது. பொதுச் சொத்தாக இருந்த காடுகள், நிலம், ஆறுகள் போன்றவை தனியார் மயமாக்கப் பட்டன (இதுவும் எங்கேயோ கேட்ட கதைபோல இல்லை?). இவற்றில் ஒன்றுதான் குவால்கர்க் என்னும் ஆற்றின் மீது நான்கு மிகப்பெரும் அணைகளைக் கட்டுவதாக இருந்த அகுவா சார்கா எனப்படும் திட்டம். இத்திட்டம் உலகின் மிகப் பெரும் அணை கட்டும் நிறுவனமான சீனாவின் சைனோஹைட்ரோ நிறுவனத்திடம் ஒப்ப்டைக்கப் பட்டது. இந்த ஆறு லென்கா என்னும் ஹோண்டுராஸ் நாட்டுப் பழங்குடியினரின் வாழ்வாதாரமாகவும், அவர்கள் தெய்வம் எனப் போற்றும் புனித நதியாகவும் இருக்கிறது. இத் திட்டத்தை அகிம்சை முறையில் கோப்பின் (COPINH) என்னும் பழங்குடியினரின் அமைப்பு எதிர்த்து வருகிறது. இவ்வமைப்பின் தலைவராக திருமதி. பெர்தா காசெரஸ் என்பவர் பல ஆண்டுகளாகப் போராடி வந்தார். 2013 ஏப்ரல் மாதம் லென்கா பழங்குடியினர் ஆற்றை அண்டுவதோ, நீர் எடுப்பதோ தடை செய்யப் பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் அங்கு அமர்த்தப் பட்டனர். இதைப் பொறுக்காத கோப்பின், அணை கட்டும் வழிக்குச் செல்லத் தடையாக ஏப்ரல் 2013ல் ஒரு மனித சாலைத் தடையை நிறுவினர். அனைத்துப் பழங்குடியினரும் தொடர்ந்து மாற்றி மாற்றி 24 மணி நேரமும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்றளவும் அத்தடை தகர்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தன்னால் இப்போராட்டங்களைச் சமாளிக்க இயலாது என்று சைனோஹைட்ரோ நிறுவனம் 2013ம் ஆண்டு இறுதியில் இத்திட்டத்தில் இருந்து பின்வாங்கி விட்டது. ஜூலை 2103ல் தாமஸ் கார்சியா என்பவரை அனைவரும் முன்னும் ராணுவம் சுட்டுக் கொன்றது. எனினும் போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்றே வருகிறது. கோப்பின் எவ்வித ஆயுதமும் இன்றி அறவழிப் போராட்டம் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கிடையில் 2015 ஏப்ரல் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மேன் நிறுவனம் சூழல் பாதுகாப்புக்கான விருதை பெர்தா காசரெசுக்கு வழங்கியது. "எனக்கு எண்ணற்ற கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வந்துவிட்டன. என் வாழ்வென்பது ஒரு நிலையற்ற எதிர்காலத்துடன் தான் நடக்கிறது. எனினும் நம் உரிமைகளை விட்டுக் கொடுப்பதோ, எதிர்ப்பைக் கைவிடுவதோ இயலாதது" மனித உரிமைகள் மிகவும் மீறப்படுவதால் இனி இத்திட்டத்திற்குக் கடன் கொடுக்க இயலாது என்று கடன் கொடுத்திருந்த நெதர்லாந்து நாட்டின் மிகப்பெரும் நிதி நிறுவனம் FMO பின்வாங்கி விட்டது. எவ்வளவு மிரட்டியும் லென்கா பழங்குடியினர் மிகத் திடமுடன் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/09 09:22 Erase cookies | Edit History | |